News
கோவை காந்திபுரம் சிறைத்துறை பெட்ரோல் பங்க் – தனியார் ஊழியர்களுடன் மீண்டும் திறப்பு
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாநகரின் மையப் பகுதியான காந்திபுரத்தில் சிறைத்துறை சார்பில் இயங்கி வந்த பெட்ரோல் பங்க் தனியார் ஊழியர்களைக் கொண்டு மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கைதி தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தப் பெட்ரோல் பங்க் மற்றும் சிறைவாசிகளால் நடத்தப்பட்டு வந்த விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் கைதிகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்காகப் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நன்னடத்தை கொண்ட சிறைவாசிகளைக் கொண்டு சிறிய அங்காடிகள், தேநீர் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவை சிறைத்துறை நிர்வாகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்றனர். இதேபோல், கோவையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டபோது, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அதிகாலை சிறை வளாகத்திற்குள் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சிறைவாசிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த கடைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிறைத்துறை சார்பில் இயங்கும் கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் தனியார் ஊழியர்களைக் கொண்டு மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, காந்திபுரத்தில் சிறைத்துறை சார்பில் இயங்கி வந்த பெட்ரோல் பங்க் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. துல்லியமான அளவு மற்றும் தரமான எரிபொருள் வழங்கப்படுவதால் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பெட்ரோல் பங்க், தற்போது தனியார் ஊழியர்களைக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது.