News
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு தணிக்கை நடவடிக்கை: 7 வழக்குகள் பதிவு, 16 பேர் கைது
SimpliCity News Team · 1 hour ago

Coimbatore: கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய சிறப்பு தணிக்கை நடவடிக்கையில் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவின்பேரில் இந்த சிறப்பு தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ரவுடிகளில் 249 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். இந்நடவடிக்கையின்போது, குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 பேர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நபர்களில் 94 பேர் தணிக்கை செய்யப்பட்டு, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதவிர, மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 115 விடுதிகளும், 63 பேயிங் கெஸ்ட் (PG) விடுதிகளில் 23 விடுதிகளும் தணிக்கை செய்யப்பட்டன.
கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடையவர்கள் மற்றும் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்கள் உள்ளிட்ட 77 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். இத்தணிக்கையின்போது, ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
தீவிர வாகனத் தணிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் 2,433 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள FL2 வகையைச் சேர்ந்த 70 மதுபான விற்பனை நிலையங்களும், FL3 வகையைச் சேர்ந்த 25 மதுபான விற்பனை நிலையங்களும் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டன.
மேலும், பொது இடங்களில் மது அருந்திய 121 பேர் மீது 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, நிலுவையில் இருந்த 4 கைது பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.
இத்தகைய சிறப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு, தணிக்கை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.