News
கோவை காந்திபுரம் அருகே சூதாட்டம்: 5 பேர் கைது, ரூ.12,500 பறிமுதல்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை காந்திபுரம் காட்டூர் காளப்பன் லேஅவுட், பண்ணாரியம்மன் கோவில் பின்புறம் திறந்தவெளி மறைவான பகுதியில் சூதாடிய 5 பேரை காட்டூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12,500 ரொக்கமும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 215 சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
காந்திபுரம் காட்டூர் காளப்பன் லேஅவுட்டில் உள்ள பண்ணாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள திறந்தவெளி மறைவான பகுதியில் சிலர் கும்பலாக அமர்ந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் காட்டூர் போலீஸ் ஸ்டேசன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திடீர் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவில் பின்புறம் உள்ள புதர் மறைவில் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து தீவிரமாக சீட்டாடிக் கொண்டிருந்த 5 நபர்களை போலீசார் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் கைதானவர்கள் ராம்நகர் காளப்பன் லேஅவுட்டைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தண்டபாணி (56), ராம்நகர் வி.என். தோட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்குமார் (39), அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் கணேஷ் (41), ராம்நகர் மாரியப்பன் வீதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் மனோஜ்குமார் (27) மற்றும் காந்திபுரம் என்.வி.என். லேஅவுட்டைச் சேர்ந்த நீலகண்ணன் மகன் கைலாசம் (30) என்று அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 215 சீட்டுகள் மற்றும் பந்தயப் பணம் ரூ.12,500 ரொக்கம் ஆகியவை அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காட்டூர் போலீசார், பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவித்தனர்.