News
தீபாவளியை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; கோவில்கள், வணிக வளாகங்களில் சோதனை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பாக உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொருட்கள் வாங்குவதற்காகவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும், சொந்த ஊர்களுக்குப் பயணிக்கவும் ஏராளமான மக்கள் திரள்வார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரக் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இதன்படி, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில், அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும், மாநகரின் வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சோதனையிடப்படுகின்றன. மேலும், மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநகர் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
