News
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 2,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக கோவை மாவட்டத்தில் இருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 1,210 பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், காந்திபுரத்தில் இருந்து 610 பேருந்துகளும், உக்கடத்தில் இருந்து 110 பேருந்துகளும், சாய்பாபா காலனியில் இருந்து 195 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதேபோல், பொள்ளாச்சியில் இருந்து 310 பேருந்துகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 110 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள எல்எஸ்ஐ மைதானத்தில் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியா வளாகத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. பயணிகளுக்காக அங்கு தற்காலிக உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9384808302 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களை 1077 அல்லது 0422-2306051 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
