News
தீபாவளி பண்டிகை: கோவை மாநகரில் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிப்பு
SimpliCity News Team · 1 min ago

Coimbatore: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் 04 காவல் துணை ஆணையர்கள், 11 காவல் உதவி ஆணையர்கள் மற்றும் 49 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு மண்டலம் (பொ) கோவை மாநகர காவல் ஆணையர் திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களது தலைமையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்தை சீரமைக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கடைவீதிகள், இரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அழகி மற்றும் அயன் ஆகிய மோப்பநாய்கள் கொண்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்திபுரம், சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், 40 ஆண்/பெண் குற்றப்பிரிவு காவலர்கள் சாதாரண உடையில் பேருந்துகளில் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர் குழுக்கள் மூலம் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம், வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளியூர் செல்லும்போது கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறை எண் (94981-81213) என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் முன்தண்டனை குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பீடு செய்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகர காவல்துறை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தீபாவளி பண்டிகையை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
