News
கோவையில் ரூ.198 கோடியில் 5 சாலை சுத்தம் செய்யும் இயந்திரங்களை அமைச்சர் வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.198 கோடி மதிப்பீட்டில், மண்டலத்திற்கு ஒரு இயந்திரம் வீதம் மொத்தம் 5 சிறியரக சாலை சுத்தம் செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.196 கோடி மதிப்பீட்டில் (தலா ரூ.39.60 இலட்சம்) ஐந்து சிறியரக சாலை சுத்தம் செய்யும் இயந்திரங்களுக்கு கொடியசைத்து, அமைச்சர் அவர்களே இயந்திரத்தினை தாமாக இயக்கிக் காட்டினார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயந்திரங்களின் மூலம் கோயமுத்தூர் மாநகராட்சி பிரதான சாலைகள் மட்டுமின்றி, உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் 2 மீட்டர் இடைவெளி கொண்ட குறுகிய சாலைகளையும் சுத்தம் செய்ய முடியும். இந்த இயந்திரம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குவதால், 8 மணி நேரத்திற்கு 40 கிலோமீட்டர் வரை சாலைகளை சுத்தம் செய்ய முடியும். ஹைட்ராலிக் இயக்க அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட கழிவுகளை உயர்த்தி எளிதாக வெளியேற்றும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக டெங்கு உற்பத்தி செய்யும் கலன்களில் நன்னீர் தேங்கியிருக்க வாய்ப்பு இருந்ததால், மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களுக்கு இடையே "அதிரடி சரவெடி" என்ற தலைப்பின் கீழ் டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப்பணி போட்டி 23.10.2026 முதல் 04.11.2026 வரை நடைபெற்றது.
இந்த போட்டியில், டயர், டப்பா, தேங்காய் சிரட்டை, உடைந்த ஜாடி, தேங்காய் ஓடுகள், உடைந்த பானைகள், பயன்படுத்தாத பாட்டில்கள், ப்ளு பேரல் டிரம்கள், கப்புகள், பார்சல் யுட் கண்டைனர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட நன்னீர் தேங்கி ஏடிஸ் கொசு உற்பத்தியாவதற்கு காரணமான கலன்களை அதிக அளவில் அகற்றும் மண்டலம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், 5 மண்டலங்களில் இருந்து மொத்தம் 28,78,563 டெங்கு காய்ச்சல் பரப்பும் கலன்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.
8,42,032 கலன்களை அகற்றிய மேற்கு மண்டலத்திற்கு ரூ.10,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி முதல் பரிசாகவும், 7,94,779 கலன்களை அகற்றிய மத்திய மண்டலத்திற்கு ரூ.5,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி இரண்டாவது பரிசாகவும், 5,21,198 கலன்களை அகற்றிய வடக்கு மண்டலத்திற்கு ரூ.3,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி மூன்றாவது பரிசாகவும், 3,90,230 கலன்களை அகற்றிய கிழக்கு மண்டலத்திற்கு ரூ.2,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி நான்காவது பரிசாகவும், 3,30,315 கலன்களை அகற்றிய தெற்கு மண்டலத்திற்கு ரூ.1,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி ஐந்தாவது பரிசாகவும் வழங்கப்பட்டு, சம்மந்தப்பட்ட மண்டலங்களை அமைச்சர் பாராட்டினார்.
மேலும், 23.10.2026 அன்று வி.வி.எம்.ஹோம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அதிர்ஷ்ட கூப்பனை செலுத்துவதற்காக அதிர்ஷ்டப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு பட்டுப்புடவைகளை இன்று அமைச்சர் பரிசாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கோயமுத்தூர் மாநகராட்சியின் நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பணி சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் மாநகராட்சி நிரந்தர ஆண் தூய்மைப் பணியாளர்கள் 1,168 பேருக்கும், பெண் தூய்மைப் பணியாளர்கள் 654 பேருக்கும் என மொத்தம் 1,822 பேருக்கு, ரூ.76,20,332 மதிப்பீட்டில் பணி சீருடைகள் வழங்கப்பட்டன. இதன் அடையாளமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் 10 பேருக்கு சீருடைகளை வழங்கினார்.
ஆண் தூய்மை பணியாளர்களுக்கு காக்கி பேண்ட் ஒரு ஜோடி, காக்கி சர்ட் ஒரு ஜோடி, தலைப்பாகை ஒன்று, காலணி ஒரு ஜோடி, சோப்புகள் 12 எண்ணிக்கை மற்றும் மழை கோட் வழங்கப்பட்டது. பெண் தூய்மைப்பணியாளர்களுக்கு சேலை ஒரு ஜோடி, பிளவுஸ் ஒரு ஜோடி, தலைப்பாகை ஒன்று, காலணி ஒரு ஜோடி, சோப்புகள் 12 எண்ணிக்கை மற்றும் மழை கோட் ஆகியவை கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர், பசுமையான மற்றும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம் என்பதனை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக, அதிரடி சரவெடி என்ற தலைப்பில் நடைபெற்ற டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப்பணியின் போது மண்டல வாரியாக சேகரிக்கப்பட்ட கலன்களை அகற்றியது தொடர்பான குறும்படத்தினையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் தகுமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி ஆணையர்கள் நர்மதா, மோகனசுந்தரி, கணேசன், செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன், மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், குணசேகரன், முருகன், தனபாலன், சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் (விற்பனை) கிருஷ்ணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



