News
QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027-ல் பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பிடம்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: உலகப் புகழ்பெற்ற QS (Quacquarelli Symonds) உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027-ல் பாரதியார் பல்கலைக்கழகம் உலகளவில் 711-720 இடங்களுக்குள் இடம்பிடித்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. மேலும், இந்திய அளவில் 23-வது இடத்தையும் பெற்றுள்ளது.
அதேபோல், QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027-ல் இந்திய அளவில் 44-வது இடத்தையும், தெற்காசிய அளவில் 72-வது இடத்தையும் பாரதியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அளவில் 47-வது இடத்தில் இருந்த பாரதியார் பல்கலைக்கழகம், தற்போது 44-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தீரஜ் குமார், இ.ஆ.ப., பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் டாக்டர் ஆர். ராஜவேல் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (Syndicate) உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து, இச்சாதனைக்குப் பங்களித்த அனைத்துப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், புல முதன்மையர்கள் (Deans), இயக்குநர்கள் (Directors), துறைத் தலைவர்கள், ஆராய்ச்சி வழிகாட்டிகள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த வெற்றியானது பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கல்விச் சமூகம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் கூட்டு முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான கல்வி, ஆராய்ச்சிச் செயல்பாடுகளுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.
மேலும், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதல், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகள், ஆட்சிக்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு ஆகியவை இச்சாதனைக்குப் பெரும் உறுதுணையாக அமைந்துள்ளன.
சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேலும் உயர்த்துதல், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், உலகளாவிய கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய இலக்குகளை நோக்கி அனைவரும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் இந்தச் சாதனை, எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச உயரங்களை எட்டுவதற்கான ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.