News
வெளிநாட்டுச் சொத்துக்களை வெளிப்படுத்தும் FAST-DS திட்டம் குறித்து ICAI கோவை கிளை விழிப்புணர்வு நிகழ்ச்சி
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: வெளிநாட்டிலிருந்த சொத்துக்களை முன்பு தெரிவிக்கத் தவறிய சிறு வரிசெலுத்துவோருக்கு, அவற்றைத் தாமாக முன்வந்து வெளிப்படுத்தி எதிர்கால அபராதங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் தவிர்க்கும் வாய்ப்பை வழங்கும் FAST-DS, 2026 திட்டம் குறித்து இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) கோவை கிளை, கோவை வருமான வரித்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
"FAST-DS, 2026 திட்டத்தில் பட்டயக் கணக்காளர்களின் பங்கு" என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி நவம்பர் 4, 2026 அன்று ஆர்.எஸ்.புரம் ICAI பவனில் நடைபெற்றது. கிளைத் தலைவர் CA. சர்வஜித் எஸ். கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
வருமான வரி கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) வி. ஸ்ரீவிஜய், IRS, தொடக்கவுரையில், முன்பு தெரிவிக்கத் தவறிய வெளிநாட்டுச் சொத்துக்களை வெளிப்படுத்த சிறு வரிசெலுத்துவோருக்கு இது ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்றும், இத்திட்டம் டிசம்பர் 31, 2026 வரை நடைமுறையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். துணை ஆணையர் ஜெ. ஐஸ்வர்யா, IRS, துணை இயக்குநர் ஜி. சுதர்சன், IRS, ஆகியோர் திட்டத்தின் அம்சங்களையும் அதில் பட்டயக் கணக்காளர்களின் பங்கையும் விளக்கினர்.
நிறைவுரை ஆற்றிய கூடுதல் ஆணையர் டாக்டர் எஸ்.கே. செந்தில்குமார், IRS, "இத்திட்டம் தண்டிப்பதற்கு அல்ல, உதவுவதற்கே. சிக்கல் இருந்தால் தயக்கமின்றி துறையை அணுகலாம்" என்றார்.
ICAI கோவை கிளைத் தலைவர் CA. சர்வஜித் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், "வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்கள், நிறுவனப் பணிக்காக On-site சென்று வந்தவர்கள் பலருக்கு வெளிநாட்டில் வங்கிக் கணக்கு, ஓய்வூதிய நிதி, பங்குகள் உள்ளன. இந்தியாவில் வசிப்பவர் ஆன பிறகு இவற்றைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் விட்டுள்ளனர். FAST-DS திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வெளிப்படுத்தினால், எதிர்கால அபராதங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் தவிர்த்து, குறைந்த செலவில் நிம்மதி பெறலாம். வரிசெலுத்துவோரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களான பட்டயக் கணக்காளர்களை இவர்கள் உடனே அணுக வேண்டும். ICAI கோவை கிளை வருமான வரித்துறையுடன் கைகோர்த்து தொடர்ந்து செயல்படும்" என்றார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முன்னாள் தலைவர் CA. என்.என். சண்முகவடிவேல், "இத்தகைய நிகழ்ச்சிகள் அரசின் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைய உதவுகின்றன" என்று கூறி நன்றியுரை ஆற்றினார். முன்னாள் தலைவர்கள், மூத்த மற்றும் இளம் பட்டயக் கணக்காளர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டயக் கணக்காளர்கள் சங்கம், தென்னிந்திய தணிக்கையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



