News
தீபாவளியை முன்னிட்டு கோவையில் ரூ.100-க்கு 10 வகை காய்கறி கொண்ட 'வெற்றி' தொகுப்பு விற்பனை தொடக்கம்
SimpliCity News Team · 2 days ago

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி' சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை கோவையில் இன்று தொடங்கப்பட்டது.
இந்தத் தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் என 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சி கோவை சிந்தாமணியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 கூட்டுறவு அங்காடிகளில் இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கோவையில் கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
