News
தீபாவளியை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் கோவை – திண்டுக்கல் இடையே நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 06169, கோவை சந்திப்பில் இருந்து காலை 9.35 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06170, திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சந்திப்பை வந்தடையும். இந்த ரயில்கள் இரு நாட்களும் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்படும். 8 பெட்டிகளைக் கொண்ட மெமு ரயில்களாக இவை இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் கோவை – திண்டுக்கல் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் கூடுதல் போக்குவரத்து வசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.