News
முதலமைச்சர் பணிக்கு விடுமுறை கிடையாது - கோவையில் விஜயை சாடிய மு.க.ஸ்டாலின்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனம் தெரிவித்தார்.
பேசும்போது, பெரியார் அறிவுலகத்திற்குக் கிடைத்துள்ள பாராட்டுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், இது மேலும் பல சாதனைகளைப் படைக்கத் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவின் தாய்க்கழகம் திராவிடர் கழகம் என்றும், தாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பவர் தந்தை பெரியார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு நூலகங்கள் அமைக்கப்பட்டதாகவும், கோவையின் புதிய அடையாளமாகப் பெரியார் அறிவுலகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கோவைக்கு ஜி.டி. மேம்பாலம், செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கியதாகவும், அவற்றின் மணிமகுடமாகப் பெரியார் அறிவுலகம் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் 99 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போதைய அரசு அதனைத் திறந்து வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும், திருநெல்வேலி, கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நூலகங்கள் அமைக்கும் திட்டங்களைக் குறிப்பிட்ட அவர், அவற்றையும் திறந்து வைக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மின்வெட்டு, கொலைச் சம்பவங்கள், சிறுமிகள் மாயமாவது, சிறைக் கைதிகள் தப்பிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அங்கிள் விஜய் அவர்களே… முதலமைச்சர் பணி என்பது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலை கிடையாது. சனி, ஞாயிறு விடுமுறையும் கிடையாது” என்று கூறி முதலமைச்சர் விஜயை மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். நடிகர் விஜயாக இருந்தபோது இல்லாத பொறுப்புகள், தற்போது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதாக முதலமைச்சர் மீது விமர்சனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், மக்களின் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றார்.
திமுக ஆட்சியில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் அவரது பெற்றோரிடம் தாம் மன்னிப்புக் கேட்டதைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளை மறைப்பதற்காக திமுக நிர்வாகிகளின் வீடுகளில் மீண்டும் மீண்டும் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
“அழுத்த அழுத்தத்தான் மேலே எழுவோம்; அதுதான் திமுகவின் டி.என்.ஏ” என்று கூறிய அவர், திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு ஆளுங்கட்சியினர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, இயற்கைப் பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகள், தற்போதைய அரசின் செயல்பாடுகளுக்கும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் பேசினார்.