News
கோவை நீலாம்பூரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த திமுக மாவட்ட அலுவலகம் – நாளை மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
SimpliCity News Team · 19 hours ago

Coimbatore: கோவை நீலாம்பூரில் 50 சென்ட் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (4-11-26) காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டடத்திற்கான ஏற்பாடுகளை திமுக கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருகின்றார்.
புதிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் 3 தளங்களை கொண்டதாக அமைய உள்ளது. இதில் கீழ் தளத்தில் கல்யாண மண்டபமும், முதல் தளத்தில் டைனிங் ஹாலும், 3ம் தளத்தில் ஒருங்கிணைந்த திமுக அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கமும் இடம்பெற உள்ளது. மேலும், விசாலமான 4 சக்கர மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தம் இடமும் இந்த கட்டடத்தில் அமைய உள்ளது.
நாளை நடைபெற உள்ள இந்த அடிக்கல் நாட்டு விழாவில், மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏவின் ஏற்பாட்டில், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தொண்டர்கள் திரளானோர் பங்கேற்க உள்ளனர்.