News
கோவை மாநகராட்சியில் நடப்பு மாதத்தில் 18,680 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
SimpliCity News Team · 17 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பு மாதத்தில் மட்டும் சுமார் 18,680 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் வெறிநாய்க்கடி நோயை (Rabies) கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் நடப்பு மாதத்தில் மட்டும் சுமார் 18,680 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 68,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, வெறிநாய்க்கடி நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாய்களுக்கான கருத்தடை அறுவை திட்டத்தின் கீழ் இதுவரை 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், 2030-ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் இல்லாத கோயம்புத்தூர் மாநகராட்சியை உருவாக்குவதே இலக்கு எனவும், இதனை அடையும் வகையில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.