News
கோவை மத்திய சிறை நுழைவுவாயிலைக் கடந்ததும் போலீஸ் பிடியிலிருந்து ரிமாண்ட் கைதி தப்பியோட்டம
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் நுழைவுவாயிலைக் கடந்த நிலையில் ரிமாண்ட் கைதி ஒருவர் போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 ரிமாண்ட் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்ட கைதி, கோவை மத்திய சிறையின் முதல் நுழைவுவாயிலைக் கடந்ததும் தப்பியோடியுள்ளார். சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக, முதல் நுழைவுவாயிலைக் கடந்த பின்னர் போலீசார் அவரது கைவிலங்கை அகற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், திடீரென அங்கிருந்து தப்பியோடினார். இச்சம்பவம் குறித்து பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடியவர் ராகவன். வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் ராகவனை கோவை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து மீண்டும் கோவைக்கு அழைத்து வரப்பட்டபோது, அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாரின் பிடியிலிருந்து அவர் தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநில போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் ராகவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், பவானிசாகர் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ராகவனை விரட்டிச் சென்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராகவனை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது, போலீஸ் வாகனம் சிறை வளாகத்தின் முதல் நுழைவுவாயிலைக் கடந்ததும், ராகவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கைவிலங்கை போலீசார் அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட ராகவன், போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பி திடீரென அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இருப்பினும், அவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறை வளாகம் பந்தயசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு விரைந்து வந்த பந்தயசாலை போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
மேலும், கோவை மத்திய சிறை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நஞ்சப்பா சாலை, வி.ஓ.சி. பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடிய ராகவனை மீண்டும் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது போலீசாரிடம் இருந்து தப்பிய ராகவன், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்டபோது, கோவை மத்திய சிறை வளாகத்திலேயே தப்பியோடிய சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், கோவையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.