News
கோவையில் 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது
SimpliCity News Team · 3 hours ago

Coimbatore: கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K.ரெட்டி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் 28.10.2026 அன்று மதுக்கரை காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் போடிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்கர்ஷன் ஜெனா மகன் சசிகாந்த் ஜெனா (38) என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து சுமார் 1.150 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்து, சசிகாந்த் ஜெனாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
கோவை, சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி டைட்டன் கம்பெனி பின்புறம் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுந்தராபுரம் போலீஸ் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி காமராஜ் நகரைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஷ் (வயது 18) என்பதும், அந்த பகுதியில் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேசன் போலீஸ், ஸ்ரீ வெங்கடேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸ் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் கைகடை பஸ் ஸ்டாப், டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பொன்னமங்கலத்தைச் சேர்ந்த கென்னடி (வயது 41) அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ எடை உள்ள ஹான்ஸ் புகையிலையை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலையை பறிமுதல் செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் கென்னடியை கைது செய்தனர்.
இதேபோல் பீளமேடு போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட்டில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 52) அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் விமல் புகையிலை பாக்கெட்டுகளை (மொத்தம் 198 கிராம்) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பீளமேடு போலீஸ், விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் இருவரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.