News
கோவை ரேஸ்கோர்ஸில் திரையரங்க வாகன நிறுத்துமிடத்தில் பைக் திருட்டு: 4 பேர் கைது
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி. தியேட்டரில் படம் பார்க்க வந்த வாலிபரின் பைக்கை திருடிய 4 பேர் கொண்ட கும்பல் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் சிக்கியது. திருடப்பட்ட பைக்கும் மீட்கப்பட்டது.
பொள்ளாச்சி சல்டானா ரோடு பகுதியைச் சேர்ந்த தீபக் குமார் (வயது 25), தந்தை தினேஷ், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி. தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக தனது பைக்கில் வந்தார். தியேட்டரின் பின்புறம் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு படம் பார்க்கச் சென்றார்.
படம் முடிந்து நள்ளிரவில் திரும்பி வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பு உள்ள பைக் மாயமாகி இருப்பதை கண்டு தீபக் குமார் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்ததை அடுத்து, அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில், பைக்கை திருடிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர். விசாரணையில் கோவை சிங்காநல்லூர் அய்யர் லே-அவுட் 12-வது தெருவைச் சேர்ந்த அபிமன்யு (வயது 25), திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் தங்கி இருந்தவருமான ராஜேஷ் (வயது 26), சிங்காநல்லூர் அய்யர் லே-அவுட் 5-வது தெருவைச் சேர்ந்த ஸ்ரீஹரி (வயது 25), அரியலூர் செந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்த வசந்த குமார் (வயது 19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதை அடுத்து 4 பேரையும் கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசன் போலீஸ், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பைக்கை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.