News
கோவையில் குழந்தை விற்பனை வழக்கு: ஆறு பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
SimpliCity News Team · 5 hours ago

Coimbatore: ஒரு வயது பெண் குழந்தையை ரூ.2,25,000/-க்கு விற்பனை செய்த வழக்கில் ஆறு பேருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 28.07.2015 அன்று, வழக்கின் புகார்தாரரான மீனாவை அவரது கணவர் ராமன் மற்றும் அவரது நண்பர் குமாரசாமி ஆகியோர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தரகர் தங்கசாமி மூலம், கன்னியாகுமரியில் செவிலியராகப் பணியாற்றி வந்த ரீட்டாவின் உதவியுடன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் இல்லாத விஜயகுமார் மற்றும் ராணி பிரபா தம்பதியருக்கு, மீனாவுக்குத் தெரியாமல் அவரது ஒரு வயது பெண் குழந்தையை ரூ.2,25,000/-க்கு விற்பனை செய்துவிட்டு, குழந்தையைக் காணவில்லை என நாடகமாடியுள்ளனர். இதையடுத்து மீனா காவல்துறையினரை அணுகியுள்ளார்.
சம்பவம் கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றதால், E2 பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 28.10.2026-ம் தேதி, வழக்கின் எதிரிகளான ராமன், குமாரசாமி, தங்கசாமி, ரீட்டா, விஜயகுமார் மற்றும் ராணி பிரபா ஆகிய ஆறு எதிரிகளும் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகுமார் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் புகார்தாரர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்த நிலையிலும், அரசு தரப்பு வழக்கறிஞர் ராமன் திறம்பட வாதாடி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.
இவ்வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்து, எதிரிகளைக் கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த E2 பீளமேடு காவல் ஆய்வாளர் கோபிக்கும், கோவை மாநகர ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும், இவ்வழக்கில் பணியாற்றிய இதர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். மேலும், நீதிமன்றப் பணிகளை மேற்கொண்ட தலைமைக்காவலர்கள் HC 914 சுப்பிரமணியம் மற்றும் HC 1935 சுரேஷ்வரன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.