News
கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு: 2 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே. நாயுடு பள்ளி மாணவர் அகிலன் உயிரிழந்த வழக்கில், சாதிய ரீதியாகத் துன்புறுத்திய இரு இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டு இளஞ்சிறார் நீதிக்குழுமம் (Juvenile Justice Board) முன் ஆஜர்படுத்தப்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோவை மாநகர காவல் துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்துபோன மாணவரின் தாயார் கௌசல்யா தேவி கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில், அன்றைய தினமே உடனடியாக இ2 பீளமேடு காவல் நிலையத்தில் குற்ற எண். 446/2026 / பிரிவுகள் 115(2), 108 BNS r/w 3(2)(v) SC/ST (POA) 1989 Act இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட உடனான தீவிர விசாரணையில், இறந்த மாணவருடன் பயிலும் சக மாணவர்கள் இருவர் அந்த மாணவனைச் சாதிய ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு இளஞ்சிறார்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாகத் துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தாயாரின் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ள கல்வி உதவித் தொகை பெறுவது மற்றும் அசைவ உணவு (பீப்) உட்கொள்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற சாட்சிகள் உட்பட 30 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோராலும் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பின்பு இறப்பிற்கான முழுமையான காரணங்கள் மற்றும் கூடுதல் துப்புகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இவ்வழக்கில் முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. எனவே, வழக்கின் விசாரணை முறையாகவும் நியாயமாகவும் நடைபெறும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதைத் தவிர்க்குமாறு கோவை மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.