News
கோவை வடக்கு, மேற்கு மண்டல பகுதிகளில் மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை மேயர் ஆய்வு
SimpliCity News Team · 5 hours ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, பழுதுகளை சரிசெய்ய உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் சேதமடைந்த சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் மழையின் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில், மாநகராட்சி அலுவலர்களால் நேரில் கள ஆய்வு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், அக்டோபர் 22, 2026 அன்று வடக்கு மண்டலம் வார்டு எண். 12க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் பிரதான சாலை, ஓம் சக்தி நகர், கருப்பன்னசாமி கோவில் ஆகிய பகுதிகளில் மேயர் மற்றும் ஆணையாளர் முன்னிலையில், மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சரி செய்வதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண். 38க்கு உட்பட்ட ஓணாப்பாளையம் பிரதான சாலை மற்றும் வார்டு எண். 37க்கு உட்பட்ட மருதமலை பிரதான சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், வடக்கு மண்டலம் வார்டு எண். 28க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, ஷோபா நகர், பட்டாளம்மன் கோயில் வீதியில் உள்ள இரயில்வே பாலம் கீழ் பகுதியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளையும், அதே வீதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், ஆணையாளர் வார்டு எண். 4க்குட்பட்ட சரவணம்பட்டி, வண்ணான்குட்டை பகுதியில் நேரில் பார்வையிட்டு, குட்டையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மண்டல தலைவர்கள் வே.கதிர்வேல் (வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), உதவி ஆணையர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சத்தியமூர்த்தி (பொ), மாமன்ற உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கண்ணகி ஜோதிபாசு, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கணேசன், விமலா, சரண்யா, சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


