News
கோவை செங்குளத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை செங்குளத்தில் பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இதனால் பறவைகளின் வாழ்விடம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கோவையில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் தங்கும் முக்கியமான குளங்களில் ஒன்றாக செங்குளம் விளங்குகிறது. இக்குளத்தில் உள்ள மரங்கள் ஏராளமான பறவைகளின் வாழ்விடமாகவும், அவை தங்குவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை முதல் செங்குளத்தில் மரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கிடைத்தது. முதலில் சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்படுவதாக எண்ணப்பட்டது. ஆனால், நேரில் சென்று பார்வையிட்டபோது, நாட்டு கருவேல மரங்களும் அதிக அளவில் வெட்டப்படுவது தெரியவந்தது.
இதுகுறித்து நீர்வளத் துறையின் உதவிச் செயற்பொறியாளரிடம் கேட்டபோது, இந்த மரம் வெட்டும் பணிக்கும் நீர்வளத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மாநகராட்சியின் அனுமதியுடன் மரங்கள் வெட்டப்படுவதாகக் கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முழுமையாக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செங்குளத்தில் மரங்களை வெட்ட மாநகராட்சி எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலையின் சூழலியல் முக்கியத்துவம், அங்கு வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதா என்பதும், நாட்டு மரங்களை வெட்டுவதற்கான அவசியம் என்ன, அதற்கான முறையான அனுமதியும் ஆவணங்களும் உள்ளனவா என்பதும் கேள்விகளாக எழுப்பப்பட்டுள்ளன.
மரங்கள் வெறும் மரங்கள் அல்ல, அவை பறவைகளின் வீடுகள் என்றும், நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது தண்ணீரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அங்கு வாழும் பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சூழலியலையும் பாதுகாப்பது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, செங்குளத்தில் நடைபெறும் மரம் வெட்டும் பணிகளை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி, அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய சூழலியல் ஆய்வு மேற்கொண்டு, பறவைகளின் வாழ்விடத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு செங்குளத்தின் மரங்களையும் பறவைகளின் வாழ்விடத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


