News
சூலூரில் மழை வெள்ளத்தால் கட்டுமானப் பொருட்கள் அடித்துச் சென்றதால் மக்கள் அவதி
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை சூலூர் தொகுதிக்கு உட்பட்ட நாகம்மா நாயக்கம்பாளையம், ஸ்ரீ பண்ணாரி அம்மன் நகர் பகுதியில் கனமழையால் கட்டுமானப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
நாகம்மா நாயக்கம்பாளையம், ஸ்ரீ பண்ணாரி அம்மன் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தற்போது புதிதாக 5 வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பெய்த கனமழையால் பசும்பொன் நகரில் இருந்து வரும் மழைநீர், காட்டாற்று வெள்ளம் போல் குடியிருப்புகளுக்கு நடுவே பாய்ந்துள்ளது. இதில், வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஏற்கனவே வாய்க்காலில் மணல் கொட்டி அடைக்கப்பட்டுள்ள நிலையில், மழை பெய்யும்போது தண்ணீர் அதை உடைத்துக்கொண்டு குடியிருப்புகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தண்ணீர் வரும் வாய்க்காலை சிமென்ட் கான்கிரீட் மூலம் சீரமைத்து, வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும் என்றும், முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

