News
பங்கு வர்த்தகத்தில் கோவை தொழிலதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி – சைபர் கிரைம் போலீசார் விசாரணை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, கோவையைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு ஆன்லைனில் முதலீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த எண்ணைத் தொடர்புகொண்ட தொழிலதிபரிடம் பேசிய நபர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய தொழிலதிபரிடம், செல்போன் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியதுடன், அதைப் பயன்படுத்துவதற்கான ஐடி மற்றும் ரகசிய எண்ணையும் வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்தச் செயலி மூலம் அவர் முதலீடு செய்யத் தொடங்கினார்.
முதலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த அவர், அதற்கான லாபத்துடன் சேர்த்து பணத்தைத் தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நிறுவனத்தின் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.2.5 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் அவர் முதலீடு செய்த தொகையுடன் லாபமும் சேர்த்து, செயலியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால், அவர் மோசடி குறித்து சந்தேகமடையவில்லை.
இந்த நிலையில், அவருக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால், செயலியில் உள்ள தனது கணக்கிலிருந்து பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், பணத்தை மாற்ற முடியவில்லை.
இதுகுறித்து நிறுவன ஊழியரைத் தொடர்புகொண்டபோது, பணத்தை எடுக்க அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதி கிடைத்ததும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஓரிரு நிமிடங்களில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்து அழைப்பைத் துண்டித்துள்ளனர்.
ஆனால், சிறிது நேரம் கழித்தும் பணத்தை எடுக்க முடியவில்லை. மீண்டும் அந்த ஊழியரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதைத் தொழிலதிபர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, ரூ.2.5 கோடி மோசடி தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.