News
கோவையில் போதைப் பொருட்கள் சோதனை: கஞ்சா, ஹெராயின், போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் கைது
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவையில் தனித்தனி இடங்களில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, கஞ்சா, ஹெராயின், போதை மாத்திரைகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை, நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோடு பகுதியில் உள்ள 60 ஏக்கர் காட்டுப்பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்று வருவதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் அந்த காட்டுப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு போதைப்பொருள் விற்றுக் கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவை வடவள்ளி ரோடு ஆட்டோ நகர் 2-வது வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் கணேஷ்குமார் (24), வெங்கடாபுரம் நேதாஜி காலனியைச் சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமார் (24) மற்றும் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் குப்புராஜ் என்ற தாஸ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.1 கிலோ கஞ்சா மற்றும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் போதை தரக்கூடிய 100 தபேண்டடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், கோவை உக்கடம் லவ் பார்க் 7-வது கேட் பின்புறம் உள்ள காலி இடத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடை வீதி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை போலீஸ் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தது.
விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஷ் தயே (28), பிருஜ் போரோ (23) மற்றும் அஜித் போரி (30) என்பது தெரியவந்தது. அவர்கள் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் கொடிய போதைப்பொருட்களை கடத்தி வந்து இங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தது அம்பலமானது. இதை அடுத்து கடை வீதி போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.20,400 ரொக்கப்பணம், 2.7 கிலோ கஞ்சா, 0.6 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருட்களை எடைபோட பயன்படுத்திய 1 எலக்ட்ரானிக் எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.