News
கோவை குனியமுத்தூரில் அரசு பேருந்து விபத்து: ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழப்பு
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை குனியமுத்தூர் சாலையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரப் பகுதியில் உள்ள குனியமுத்தூர் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே, 66-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுநர் மார்ட்டின் ஓட்டிச் சென்றுள்ளார். காந்திபுரம் முதல் பச்சாபாளையம் வரை இயங்கிய இந்த பேருந்தில் பரமேஸ்வரன் கண்டக்டராகப் பணியாற்றினார். பேருந்து சுங்கம் 2-வது பேருந்து பணிமனையைச் சேர்ந்தது. ஓட்டுநர் மார்ட்டினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தாறுமாறாகச் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர் அப்பாஸ் (46) உள்ளிட்ட ஒருவர் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கரும்புக்கடை காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த இருவர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மார்ட்டினையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது துரதிஷ்டவசமாக மார்ட்டினும் உயிரிழந்தார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, விபத்துக்குள்ளான அரசு பேருந்தை போக்குவரத்துக் காவலர்கள் அப்புறப்படுத்தி, போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு நிலவியது.


