News
கோவை லாலி ரோடு குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி
SimpliCity News Team · 11 hours ago

Coimbatore: கோவை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாகப் பரவலாகப் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, லாலி ரோடு பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாகவே மாலைக் காலங்களில் வெளுத்து வாங்கும் கன மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாக, இன்று மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை மற்றும் அதனை ஒட்டி உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனப் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் போலத் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தொடர்ந்து பெய்த கன மழையால் முறையான வடிகால் வசதியின்மை காரணமாக, லாலி ரோடு பகுதியில் உள்ள பிரதான குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்குள் திடீரென வெள்ளநீர் புகுந்ததால், வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள், படுக்கைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்தன.
திடீரென வீடுகளுக்குள் புகுந்த நீரால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அப்பகுதி மக்கள், பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், சாலைகளில் தேங்கி உள்ள மழை நீரால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

