News
கோவை செங்காளிபாளையம் மகா கணபதி கோவிலில் 2ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவம்
SimpliCity News Team · 14 hours ago

Coimbatore: கோவை செங்காளிபாளையம் அருள்மிகு மகா கணபதி திருக்கோவிலில் மகளிர் சார்பாக இரண்டாம் ஆண்டாக நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 7 படி நிலைகளில் கொலு அமைத்து பாடல்கள் பாடி வழிபாடு செய்த பெண்கள், தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேர் கும்மி அடித்து வழிபாடும் நடத்தினர்.
கோவை இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட செங்காளிபாளையம் கிராமத்தில் அருள்மிகு மகா கணபதி திருக்கோவில் உள்ள அனைத்து மகளிர் சார்பாக ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டாக இந்த திருக்கோவிலில் 7 படி நிலைகளில் கொலு அமைக்கப்பட்டு உற்சவத்திருவிழா விமர்சையாக நடைபெற்று வந்தது.
இந்த கொலுவில் ஒரு படி நிலையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகர், லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும், மற்றொரு படி நிலையில் கிருஷ்ணர், ராதை, பெருமாள், வள்ளி, தெய்வானையுடன் முருகர், விநாயகர், அம்மன், கிருஷ்ணரின் பல்வேறு வடிவங்களில் சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணரின் 9 அவதாரங்கள் ஒரு படி நிலையிலும், கடவுள் சிலைகளுடன் திருமண வைபோகத்தின் மணமகள் மணமகன் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு படி நிலையில் பூரண கும்பத்துடன் பாடம் படிக்கும் மாணவர்கள் மற்றும் விலங்கு சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. மேலும் முளைப்பாளிகையுடன், அம்மிக்கல், ஆட்டாங்கள், பழங்கள், பல்வேறு தானியங்களும் கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
இதனுடன் விழாவில் கலந்து கொண்ட மகளிர் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், அவுல், சுண்டல், கேசரி, கிச்சடி உள்ளிட்டவைகளை தெய்வங்களுக்கு படைத்து அதனை அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடவுள் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். இதில் செங்காளிபாளையம் சுற்றுப் பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் திடலில் கும்மியடி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.

