News
வால்பாறையில் வீட்டுப் பின்புறம் உடல்நிலை பாதித்த சிறுத்தை - வனத்துறையினர் மீட்பு
SimpliCity News Team · 15 Oct 2026

Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு அணை இடதுகை பகுதியில் வீட்டுக்குப் பின்னால் அசைவின்றி படுத்திருந்த சிறுத்தைப்புலி ஒன்றை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
சோலையாறு அணை இடதுகை பகுதியில் குடியிருந்து வரும் சேகர் என்பவரின் வீட்டின் பின்புறம் அதிகாலையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்திருந்ததைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். சிறுத்தைப்புலி அசைவின்றி இருந்ததால் உயிரிழந்து விட்டதோ என்ற சந்தேகத்தில் சம்பந்தப்பட்ட மானாம்பள்ளி வனச்சரக அலுவலருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் வீட்டில் இருந்தவர்களை முன் வாசல் வழியாக வெளியேற்றி சிறுத்தையை கண்காணித்தனர். உடல்நிலை சரியில்லாமல் இறக்கும் தருவாயில் உள்ளதா அல்லது ஏதேனும் விலங்குகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டபோது உடல்நிலை சரியில்லாதது உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் வனத்துறை மருத்துவர் மெய்யரசன் மருத்துவ பரிசோதனை செய்தபோது சுமார் நான்கு வயதுள்ள ஆண் சிறுத்தை என்றும், அதற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் மேல்சிகிச்சைக்காக சின்னக்கல்லார் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


