News
கோவை மத்தம்பாளையத்தில் மின் கம்பி உரசி வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மத்தம்பாளையம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், தீயனைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தஞ்சாவூரில் இருந்து கோவை மத்தம்பாளையத்தில் உள்ள காளான் பண்ணைக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு அசோக் லேலாண்ட் லாரி வந்துள்ளது. இதனை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் லாரி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மத்தம்பாளையம் அருகே வந்தபோது, மேலே சென்ற மின் கம்பி உரசியுள்ளது. இதில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து லாரியில் இருந்து பாஸ்கரன் கீழே இறங்கி, அருகில் இருந்தவர்கள் மூலம் தீயனைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் தீயனைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.