News
தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கங்களாக மாற்றம் – கோவை நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய ‘லோகோ’ அறிமுகம்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: நடிகர் தனுஷின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றங்கள் அனைத்தும் 'தனுஷ் நற்பணி இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் தனுஷின் மாநில அளவிலான ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், புதிய லோகோ மற்றும் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய கொடியில், நடிகர் தனுஷ் கைகூப்பி வணங்குவது போன்ற நிழற்பட வடிவம், ஒரு நட்சத்திரம் மற்றும் அவரது தாரக மந்திரமான "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில், தனுஷ் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் ராஜா, அரசியல் விமர்சகர் ரபி பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் தங்களது அலைபேசிகளை மண்டபத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அறந்தாங்கி நிஷா மற்றும் ஈரோடு மகேஷ் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.
ஏற்கனவே நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த மாற்றம் எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்குமா அல்லது சமூக நலப் பணிகளை முன்னெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், புதிய இயக்கத்தின் அடுத்தகட்டச் செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.