News
சூலூர் தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
SimpliCity News Team · 14 Oct 2026

Coimbatore: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். பொதுமக்களையும் குறிப்பாக மாணவிகளையும் குறிவைத்து நடைபெறும் பல்வேறு இணையவழி மோசடிகள் குறித்தும், அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆன்லைன் முதலீட்டு மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி, டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடி, KYC விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி நடைபெறும் மோசடி, போலியான APK கோப்புகள் மூலம் நடைபெறும் மோசடி, போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் நடைபெறும் மோசடி, ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி, திருமண இணையதள மோசடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி, கடன் செயலிகள் (Loan Apps) மூலம் நடைபெறும் மோசடி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், செல்போன்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல், சமூக வலைதளங்களின் தாக்கங்கள், மொபைல் கேம்களை அதிகமாக விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இணையவழி மிரட்டல் (Cyber Bullying) ஆகியவை குறித்தும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், OTP, PIN உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிரக்கூடாது என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இணையவழி நிதி மோசடிகளால் பாதிக்கப்படும் நபர்கள், தாமதமின்றி 1930 என்ற சைபர் நிதி மோசடி உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in என்ற சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

