News
கோவை மேற்கு மண்டல நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வு கொலு கண்காட்சி
SimpliCity News Team · 12 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், பாரதி பூங்கா சாலையில் அமைந்துள்ள மீனாட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு கொலு கண்காட்சியினை, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. இன்று (14.10.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி பூங்கா சாலையில் இயங்கிவரும் மீனாட்சி மகப்பேறு மருத்துவமைய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு கொலு கண்காட்சி (NCD Golu) அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வு கொலு கண்காட்சியில் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் உள்ளிட்டவை வராமல் தடுப்பதற்கான செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து 5 படிகளில் இரண்டு பிரிவுகளாக "செய், செய்யாதே" என்ற தலைப்பில் பொம்மைகள் கொண்டு விளக்க கொலு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
முதல் படியில் அன்றாட வாழ்வியல் நடைமுறை மாற்றங்களான 45 நிமிட நடைபயிற்சி, யோகா, உடற்பயிற்சி ஆகியவை செய் பிரிவிலும், அதிகம் சாப்பிடுவது, சோம்பலான வாழ்க்கை முறை மற்றும் தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் அதிகநேரம் செலவிடல் போன்றவை செய்யாதே பிரிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் படியில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவை செய் பிரிவிலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், பேக்கரி திண்பண்டங்கள், துரித உணவுகள், நொறுக்கு தீணிகள், அதிக அளவு உப்பு, எண்ணெய் போன்றவை செய்யாதே பிரிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் படியில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உப்பு அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளை பொதுமக்கள் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்று செய் பிரிவிலும், தொடர் சிகிச்சையின்மை போன்றவை செய்யாதே பிரிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நான்காம் படியில் மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மகளிருக்கான பரிசோதனை முறைகள் மற்றும் 14 வயது இளம்பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (எச்.பி.வி) செலுத்துவது என்பதை செய் பிரிவிலும், சிறுவயது திருமணம், அதிக குழந்தைபேறு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது ஆகியவை செய்யாதே பிரிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது படியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை முறைகள் பற்றி செய் பிரிவிலும், புகையிலை சார்ந்த பொருட்கள், மதுபானம், பீடி, சிகரெட் உள்ளிட்ட போதை பழக்கங்களை தவிர்க்க செய்யாதே பிரிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, விளிம்புநிலையில் உள்ள நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை ஆதரவு மற்றும் வலி நிவாரண கவனிப்பு பணிகளை மேற்கொண்டுவரும் செவிலியர்கள் நித்யா, பெலிசியா, பிரியதர்ஷினி, டயானா, மெர்ஸி உள்ளிட்டோருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த தொற்றாநோய் தடுப்பு விழிப்புணர்வு கொலுவை பொதுமக்கள் அதிக அளவில் வந்து காண்பதன் மூலம் தொற்றுநோய்கள் வருவதை தடுக்க முடியும். மேலும், தொற்றாநோய்கள் மூலம் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும். எனவே, பொதுமக்கள் இந்த கொலுவை பார்வையிட்டு, பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாநகர நகர் நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி மற்றும் மீனாட்சி மகப்பேறு மருத்துவ மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

