News
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அரிக்கேன் விளக்குடன் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாநகராட்சியில் தெருவிளக்கு கூட மாற்ற முடியாத மோசமான நிலை நீடிப்பதாகக் குற்றம் சாட்டி, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அரிக்கேன் விளக்குடன் மாநகராட்சி சாதாரணக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் இன்று சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த நான்கு மாதங்களாக புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கோவையின் அடிப்படை வசதிகள் முடங்கிப் போய் இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த நான்கு மாதங்களாக குறைந்தபட்சம் பழுதான தெருவிளக்குகளைக் கூட மாற்ற முடியாத அளவுக்கு மாநகராட்சி நிர்வாகம் கேவலமான நிலையில் இயங்கி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்தத் துறையின் கீழ் உள்ள கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகப்படியான வரிப்பணத்தைச் செலுத்திவிட்டும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த கால அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் காலத்தில் கோவையில் அனைத்து ஸ்மார்ட் சிட்டி பணிகளும், சாலைகளும் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டு கோவை அழகுபடுத்தப்பட்டதாக ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். ஆனால், இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், மாநகராட்சிக்குத் தேவையான நிதியை அரசு சுணக்கமின்றி வழங்க வேண்டும் என்றும், டெண்டர்கள் முறையாக விடப்படாமல் தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அரசும் சரி, மாநகராட்சி மேயரும் சரி, இந்தப் பணிகளில் சுணக்கமாகவே செயல்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு, பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்திற்கான உரிய பலன்களை வழங்கும் வகையில் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

