News
வன உரிமைச் சட்டம் 2006-ஐ உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடியினரை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவதைத் தடுக்கக் கோரி, 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் மீராபாய் பேசுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று தெரிவித்தார்.
வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதிக்கு முன்பு மூன்று தலைமுறைகளாக வனம் சார்ந்து வாழ்கின்ற மக்களை வெளியேற்றக் கூடாது என சட்டம் இருக்கும் போது, அதற்குப் புறம்பாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 10,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே 2019-ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வரையில் அவர்களை யாரும் வெளியேற்றக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அடிப்படை உரிமைகள் மற்றும் வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மீராபாய் தெரிவித்தார்.


