News
தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: கோவையில் நயினார் நாகேந்திரன்
SimpliCity News Team · 2 days ago
Coimbatore: மதுராந்தகத்தில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், தாராபுரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நல்ல செய்திகளாகவே உள்ளன என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். பாஜகவின் கிளையாக திமுக மாறிவிட்டதாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நாகேந்திரன், முதலமைச்சரின் பேச்சில் தடுமாற்றம் இருந்ததாகவும், எதை எவ்வாறு கூற வேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை எனவும், அந்தத் தடுமாற்றம்தான் அவருக்கு பெரிய மாற்றமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இதைச் செய்துள்ளோம், அதைச் செய்துள்ளோம் என்று தவெக வினர் பட்டியல் போடுவதாக குறிப்பிட்ட அவர், மகளிருக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அனைத்து முதலமைச்சர்களும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கோப்புகளில் கையெழுத்திடுவார்கள் என்றும், எந்தக் கோப்பில் கையெழுத்திட்டீர்கள், என்னதான் செய்துள்ளீர்கள் என்றும் கேள்விகளை எழுப்பினார்.
ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாகவும், பால் விலை உயர்ந்துள்ளதாகவும், பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பட்டியலிட்ட அவர், இப்படியே சென்றுகொண்டிருந்தால் இன்னும் நான்கு மாதங்களில் தமிழகத்தில் குடிப்பதற்குக்கூட பால் கிடைக்காது, குழந்தைகளுக்கும் பால் கிடைக்காது, இதுதான் அவர்களுடைய நிர்வாகம் என்று விமர்சித்தார்.
முதலமைச்சர் எதையோ செய்ய நினைத்து எதையோ செய்துகொண்டிருக்கிறார் என்றும், அவர் பேச வந்தது ஒன்று, நினைத்தது ஒன்று, ஆனால் தற்போது நடந்துகொண்டிருப்பது ஒன்று என்றும், இதுதான் தேர்தலின் முடிவாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
170 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி சுனித்துக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் செங்கோல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது தொடர்பான கேள்விக்கு, அது நல்ல விஷயம்தான் என்றும், அது மிகப்பெரிய வரலாறு என்றும் தெரிவித்தார். தமிழரின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்திலும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும், ரஷ்ய அதிபர் புதின் வரும்போதுகூட திருக்குறளைத்தான் பரிசாக அளித்துள்ளோம் என்றும், பிரிக்ஸ் மாநாட்டிலும் பரிசாக திருக்குறள்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அப்படி என்றால் தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது பிரதமர் எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார், அன்பு செலுத்துகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்று சுட்டிக்காட்டினார்.
ஓம் காளி என்ற வார்த்தைகளை தற்போது அரசியல் தலைவர்கள் பிரச்சாரங்களில் குறிப்பிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சனாதன தர்மம் என்பது என்ன என்று பாதிப் பேருக்குத் தெரியாது என்றும், இந்து மதம் குறித்து பேசிக்கொண்டே இருந்த திமுக தற்போது ஆட்சியிலேயே இல்லை என்றும் தெரிவித்தார். அப்படி இருக்கும்போது விஜய், ஓம் சக்தி, பராசக்தி, நாங்கள்தான் தூய சக்தி என்று குறிப்பிடுகிறார் என்றும், தீய சக்தி திமுக என்று அவரே குறிப்பிட்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்றால், யார் தீய சக்தி, யார் நல்ல சக்தி என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்தார்.