Health
கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய்க்கான பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், CTEPH (Chronic Thromboembolic Pulmonary Hypertension) எனப்படும் நாள்பட்ட த்ரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய்க்கான பிரத்யேக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதுடன், நவீன மருத்துவ சிகிச்சைகளை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.
நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த உறைதல் ஏற்படுவது (Pulmonary Embolism) ஒரு முக்கியமான அவசரகால இருதய மற்றும் இரத்த நாள பாதிப்பாகும் என மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் போனால், நாளடைவில் நுரையீரலில் இரத்த அழுத்தம் அதிகரித்து CTEPH எனப்படும் நாள்பட்ட பாதிப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நோயின் முக்கிய அறிகுறியாக மூச்சுத்திணறல் காணப்படுகிறது. குறிப்பாக, நடக்கும்போதும், படிக்கட்டுகளில் ஏறும்போதும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால், இத்தகைய அறிகுறிகளைப் பலரும் இருதயப் பிரச்சனை, ஆஸ்துமா அல்லது COPD எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் தொடர்புபடுத்தி தவறாகக் கருதுகின்றனர். இதனால் நோயைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. உரிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டால் மட்டுமே இந்நோயைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
CTEPH நோய்க்கு அறுவை சிகிச்சை, பலூன் சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். நோயாளியின் உடல்நிலை, நோயின் தீவிரம் மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து, மருத்துவர்கள் அடங்கிய குழு எந்த வகையான சிகிச்சை பொருத்தமானது என்பதை முடிவு செய்யும்.
இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், நுரையீரலில் அதிகரித்துள்ள இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதுடன், நோயிலிருந்து முழுமையாகக் குணமடைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நோய் பாதிப்பு ஏற்பட்டு 5 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்படும் நிலையில், சிகிச்சையின் பலன் எவ்வாறு இருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
மேலும், நுரையீரல் இரத்தக் குழாய்களில் இரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், அதற்காக மாத்திரைகளை மட்டும் தொடர்ந்து எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், சிறப்பு மருத்துவ மையத்தை அணுகி முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
பொதுமக்களிடையே CTEPH நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் தேவையான தொடர் சிகிச்சைகளை வழங்குவது ஆகியவை இந்தப் பிரத்யேக சிகிச்சை மையத்தின் முக்கிய நோக்கங்களாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


