Govt Notification
படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம் : கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்
SimpliCity News Team · 03 Jun 2019

கோவை : கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணியினை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணியினை இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று, பள்ளிகளுக்கு எடுத்து செல்ல வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளவேண்டும்.
இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய நாள் முதல் பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பு பதிவு செய்ய இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.