Govt Notification
கோவை வடகோவை-மருதமலை சாலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோயம்புத்தூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள வடகோவை-மருதமலை சாலையில் (SH-167) பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநில நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட வடகோவை-மருதமலை சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக 9.15 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
இதில் தற்போது வரை 7.35 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடகோவை மருதமலை சாலையில் நான்கு பகுதிகளாக உள்ள 9.15 கி.மீட்டர் சாலை சீரமைப்பு பணிக்காக மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தம் ரூ.11.60 கோடி மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்படி சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பாதுகாப்பாகப் பயணிக்கும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து சாலைகளும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
