Govt Notification
கோவையில் மழைநீர் சேகரிப்பு வீடியோ போட்டி: சிறந்த வீடியோவுக்கு ரூ.5,000 பரிசு–மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடியோவாக பதிவு செய்து பகிரும் பொதுமக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோவிற்கு ரூ.5,000/- பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் 21.10.2026 அன்று நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் 'துளி' இலச்சினையை அறிமுகப்படுத்தி, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அதிகளவில் ஏற்படுத்துவதை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் முறையாகச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது நீர்வளப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் எதிர்கால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நீராதாரங்களைப் பாதுகாப்பதற்கும் வழிவகை ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு குடியிருப்பு, வணிக நிறுவனம் மற்றும் பொதுக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதுடன், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவசியமாகும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பை ஊக்குவிக்கவும், கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் "மழை Free... வீணாக்காதீங்க!" என்ற தலைப்பில் சமூக வலைதளப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்களது வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்களை வீடியோவாகப் பதிவு செய்து, கோயம்புத்தூர் மாநகராட்சியின் சமூக வலைதளமான @cbecorp உடன் இணைத்து (Collaboration Post) வருகின்ற டிசம்பர் 24-ம் தேதிக்குள் பகிர வேண்டும். இவ்வாறு பகிரப்படும் வீடியோக்களில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோவிற்கு ரூ.5,000/- பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில், பொதுமக்களின் சிறப்பான மற்றும் புதுமையான மழைநீர் சேகரிப்பு முயற்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டு சேர்ப்பதுடன், ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கவும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் பொதுமக்களை ஊக்குவிப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று, மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தங்களது பங்களிப்பை வழங்கி, கோயம்புத்தூர் மாநகராட்சியின் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.