Govt Notification
கோவையில் மாநகராட்சி சார்பில் துணிக் கழிவுகள் சேகரிப்பு "மறு நெசவு” திட்டம் குறித்த பயிலரங்கம்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படுத்தப்பட்ட 'மறு நெசவு - Weave Again' திட்டத்தின் மூலம் சுமார் 10 வாரங்களில் 6,100 கிலோ வீட்டு துணிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துணிக் கழிவுகள் சேகரிப்பு 'மறு நெசவு' திட்டம் குறித்த பயிலரங்கம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் இன்று (20.11.2026) நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, GIZ இந்தியா மற்றும் GT Bharat இணைந்து செயல்படுத்திய இந்த வீட்டுத் துணிக்கழிவு (Post-Consumer Textile Waste) மேலாண்மை முன்னோடி திட்டத்தின் முடிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பயிலரங்கம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டா ரவி தேஜா, மறு நெசவு திட்டத்தின் மூலம் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகளை தனியாக சேகரித்து, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கான நிலையான மேலாண்மை முறையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். சேகரிக்கப்பட்ட துணிக்கழிவுகளில் 53 சதவீதம் மறுபயன்பாட்டிற்கும், 44 சதவீதம் நூல் தயாரிப்பு மறுசுழற்சிக்கும், மீதமுள்ள 3 சதவீதம் பிற மீட்புவழிகளுக்கும் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். இதன் மூலம் பெரும்பாலான துணிக்கழிவுகள் கலப்பு குப்பைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு, அவை மதிப்புள்ள வளமாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களுடன் தொடர்ந்து மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் இத்திட்டத்தின் வெற்றிக்கு பெரும் ஆதாரமாக அமைந்தது. முன்பு வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் பொதுவாக நான்கு வகை குப்பைகளுடன் சேர்த்து அகற்றப்பட்டு வந்தன. இதனால் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி இல்லாமல் இருந்தது.
தற்போது இந்த 'மறு நெசவு Weave Again' திட்டத்தின் மூலம் மக்கள் வீடுகளிலேயே துணிகளை தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, துணிக்கழிவுகள் மீட்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த திட்டமானது தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னதாக, துணிக்கழிவுகள் சேகரிப்பு 'மறு நெசவு' திட்டம் குறித்து நடைபெற்ற பயிலரங்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர், தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் ஏ.கே.தெய்வயானை தமிழ்மறை, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் நர்மதா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

