Govt Notification
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆணையாளர்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், பகவதி கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கு மண்டலம், வார்டு எண்.17க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், பகவதி கார்டன் பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆணையாளர் இன்று (04.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பகவதி கார்டன் தெரு பகுதியில் சுமார் 700 மீட்டர் தொலைவிற்கு, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் III (TURIP) கீழ், மொத்தம் 8 சாலைகளுக்கு தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர், பாலசுந்தரம் சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்.மைதான வளாகத்தில் அமைந்துள்ள சாலை பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடர்பான போக்குவரத்து பூங்காவினை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர்கள் நர்மதா (மேற்கு), மோகனசுந்தரி (வடக்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சத்தியமூர்த்தி (பொ), சரவணக்குமார் (பொ), மண்டல சுகாதார அலுவலர்கள் முருகன், குணசேகரன் (பொ), உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஜெயின்ராஜ், பாபு, திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

