Govt Notification
கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெற்ற மேயர்
SimpliCity News Team · 20 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 41 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையிலும் இன்று (03.11.2026) இக்கூட்டம் நடைபெற்றது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, புதிய குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 41 மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், டாக்டர்.நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் சி.முபாரிஷ், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஜுடோ போட்டியில் 73 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக ரூ.50,000 பெற்று வெற்றி பெற்றமைக்காக மேயரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அதேபோல், கேரம் போட்டியில் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பரணிதரன் மற்றும் அரவிந்த் ஆகியோர் இருவர் பிரிவில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். தனிநபர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த பரணிதரனுக்கு வெண்கலப் பதக்கமும் பாராட்டு சான்றிதழும் கிடைத்தன.
கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுடோ போட்டியில், அனுப்பர்பாளையம் டாக்டர் நஞ்சப்பா சாலை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல பதக்கங்கள் வென்றனர். 7-ம் வகுப்பு மு.ஷாஹித் 40 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், 8-ம் வகுப்பு பை.நபீஸ் 30 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், 9-ம் வகுப்பு முஹம்மது நௌபல் 60 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், 10-ம் வகுப்பு அருண்குமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
அதே பள்ளியில் பயிலும் இர்பான் அகமது 40 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், நளன் 55 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், முபாரிஷ் 73 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும் பெற்றுள்ளனர். மத்திய மண்டலம் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் முகமது ரசீது 35 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், ரியான் 30 கிலோ எடை பிரிவில் (மாவட்ட அளவில்) தங்க பதக்கமும் பெற்றனர். ஆர்.எஸ்.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் காவியா 52 கிலோ எடை பிரிவில் வெள்ளிபதக்கமும், 11-ம் வகுப்பு மலர் 70 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்றனர். இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வேண்டோ போட்டியில் மூன்றாவது இடம் பெற்ற 12-ம் வகுப்பு பிரதீஷா வெண்கல பதக்கம் பெற்றார். இவர்கள் அனைவரும் பெற்ற பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மேயரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 நகரங்களில் நடைபெறும் சுவாநிதி கொண்டாட்டத்தில் (SVANIdhi Mahotsav), கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளில் முதல் தவணை ரூ.15,000, இரண்டாம் தவணை ரூ.25,000 மற்றும் மூன்றாவது தவணை ரூ.50,000 என மூன்று தவணை கடன்களை எந்தவித நிலுவையும் இல்லாமல் முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகளில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் மண்டலத்திற்கு தலா ஒரு பயனாளி வீதம் மொத்தம் ஐந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை கௌரவிக்கும் வகையில் மேயர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இக்கூட்டத்தில் துணை மேயர் ரா வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் த.குமரேசன், மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர்கள் நர்மதா (மேற்கு), மோகனசுந்தரி (வடக்கு), முத்துசாமி (தெற்கு), கணேசன் (மத்தியம்) மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



