Govt Notification
கோவையில் வாய்க்கால் தூர்வாரும் பணி, கட்டுமானப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர், அய்யன்குட்டை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.89க்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர், அய்யன்குட்டை வாய்க்காலில் (ஜெயா என்கிளேவ் குடியிருப்பு பகுதியில்) நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கட்டா ரவி தேஜா நவம்பர் 2, 2026 அன்று நேரில் பார்வையிட்டார். இந்த வாய்க்காலில் சுமார் 13 கி.மீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 700 மீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், காந்திபுரம் செம்மொழிப்பூங்காவில் நடைபெற்றுவரும் மாநாட்டு அரங்கம் (Convention Hall) கட்டுமானப் பணிகளையும், உக்கடம் பேருந்து நிலையம் முனையம் 200ல் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாநகராட்சி ஆணையாளர், வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் நடைபெற்றுவரும் இயற்கை எரிவாயு மைய (BIO GAS PLANT) கட்டுமானப் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு, கூடுதலாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலம், வார்டு எண் 83க்கு உட்பட்ட காளீஸ்வரா நகர் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தினை நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தகுமார், உதவி ஆணையர்கள் முத்துசாமி (தெற்கு), மகேஷ்கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளர்கள் ஜெகன், லதா, உதவி செயற்பொறியாளர்கள் ஜாக்குலின் ஜாய், சரவணக்குமார் (பொ), கனகராஜ் (பொ), மண்டல சுகாதார அலுவலர் சதீஷ்குமார், குணசேகரன் (@), உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், சந்தீப்குமார், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


