Govt Notification
கோவை மாநகராட்சியில் டெங்கு தடுப்புக்கு 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 8,81,931 தேவையற்ற பொருட்கள் அகற்றம்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு தடுப்பு பணிக்காக 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, டயர்கள் மற்றும் பழைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை சேகரித்து முற்றிலும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இக்குழுக்கள் 5 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணிகளை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மேற்கொண்டு வருகின்றனர். முதிர் கொசுக்களை அழிக்கும் இப்பணியினை தொய்வின்றி செய்திட 60 நபர்கள் கொண்ட சிறப்பு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த மழை காரணமாக வீட்டின் பின்புறத்தில் வாளி, மண்பானை, ஆட்டுக்கல், உரல், பூந்தொட்டி, ப்ளு டிரம்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், அகல் விளக்குகள், பார்சல் உணவு டப்பாக்கள், பிரிஜ்ட், மணி பிளான்ட் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாதவாறு பொதுமக்கள் தாமாக முன்வந்து கண்காணிக்க வலியுறுத்தப்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் சுயமருத்துவம் செய்யாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை நிலையங்களை அணுகி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மண்டலங்களில் அதிரடி சரவெடி போட்டி தொடர் மூலம் நன்னீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் கலன்களை முழுமையாக அகற்றுவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்றுவரை 8,81,931 கலன்கள் சேகரித்து அகற்றப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெறும் மண்டலத்திற்கு முதல் பரிசாக ரூபாய் 10,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி பொது சுகாதார துறையின் சார்பில், வடகிழக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 23.10.2026 முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் 11,021 நபர்களுக்கு ஒ.ஆர்.எஸ் குடிநீர், கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 297 சிறப்பு முகாம்களில் 16,394 பேர் பங்கேற்று பயனடைந்தனர். இதில் 54 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு இரத்த பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மழைநீர் தேங்கி அகற்றப்பட்ட பகுதிகளில் மழைக்கால தொற்றுநோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதித்து உரிய சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என மாநகராட்சி சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


