Govt Notification
கோவையில் மாநகராட்சி சார்பில் 47,000 சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
SimpliCity News Team · 3 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control - ABC) திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 47,000 சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சமூக நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத கோயம்புத்தூர் என்ற இலக்கை அடையவும், இந்த ABC திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, HAS நிறுவனத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் டாக்டர்.ஜிஸ்னா மற்றும் டாக்டர்.ருஹி ஆகியோர் சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சை மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர்.வருண்குமார் நேரில் ஆய்வு செய்து, அறுவை சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுவரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை மாநகராட்சியின் திட்டத்தின் கீழ் சுமார் 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மேற்கண்ட திட்டத்துடன் இணைந்து, சமூக நாய்களுக்கு முறையான வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination - ARV) செலுத்துதல் மற்றும் பிற வெறிநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகள் அனைத்தும் 2030-ஆம் ஆண்டுக்குள் கோயம்புத்தூரை வெறிநோய் இல்லாத நகரமாக உருவாக்கும் மாநகராட்சியின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சமூக நாய்களின் கருத்தடை, தடுப்பூசி மற்றும் பொறுப்பான மேலாண்மையை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி தனது கால்நடை மருத்துவ உட்கட்டமைப்பு, அறுவை சிகிச்சை திறன், தடுப்பூசி பணிகள் மற்றும் களப்பணிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
