Govt Notification
கோவை மருதமலை சாலையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 5 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று (28.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கு மண்டலம், வார்டு எண்.36க்கு உட்பட்ட இப்பகுதியில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவுபெற்ற இடங்களில், மாநகராட்சி சார்பில் தற்போது சுமார் 1.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெட் மிக்ஸ் கலவை கொண்டு தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். மீதமுள்ள சுமார் 2.6 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலைப் பணிகளிலும் தற்காலிகமாக வெட் மிக்ஸ் கலவை கொண்டு சாலை சீரமைக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கணுவாய் வழியாக சோமையம்பாளையம் பஞ்சாயத்து பகுதியிலிருந்து கிருஷ்ணம்பதி குளத்திற்கு வரும் பகுதியில், அண்ணா நகர் செக்போஸ்ட் அருகில் உள்ள ஓடையில் புதிதாக 4 எண்ணிக்கையிலான கல்வெட்டு அமைக்கும் பணியினை மேற்கொள்ளவும், அப்பகுதியிலுள்ள மாநகராட்சி இடத்தினை நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்றி மழைநீர் வடிகால் தூர்வார வேண்டும் என ஆணையாளர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம், வார்டு எண்.13க்கு உட்பட்ட சபரி கார்டன் பகுதியில் மழைநீர் செல்ல இயற்கை வழித்தடம் இல்லாத காரணத்தால், தாழ்வான பகுதியில் தொட்டி கட்டி மோட்டார் அமைத்து, அருகிலுள்ள கணேசன் வீதியில் அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் குழாய் மூலம் மழைநீரை வெளியேற்றம் செய்ய வேண்டும் என ஆணையாளர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அதே வார்டுக்கு உட்பட்ட கே.கே நகர் பகுதியில், பொதுமக்களுக்கு குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்து மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பணிகளை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். குப்பைகளை தரம் பிரிப்பதற்காக, பச்சை நிறம், நீல நிறம், சிவப்பு நிறம், கருப்பு நிறம் என நான்கு நிறங்களால் ஆன குப்பை தொட்டிகளை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல உதவி தலைவர் ஆணையர்கள் தமிழ்மறை, நர்மதா (மேற்கு), மோகனசுந்தரி (வடக்கு), செயற்பொறியாளர்கள் ஜெகன், தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சத்தியமூர்த்தி (பொ), மாமன்ற உறுப்பினர் சுமதி, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், முருகன், உதவி பொறியாளர்கள் விமலா, கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


