Govt Notification
கோவையில் மாநகராட்சி சார்பில் 1,209 பணியாளர்கள் மூலம் தீவிர டெங்கு தடுப்பு பணி
SimpliCity News Team · 22 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சியில் 1,209 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மற்றும் 100 புகை மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, டெங்கு பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்கள், 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து முற்றிலும் ஒழிக்கவும் மாநகராட்சி சார்பில் தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகளில் 1,209 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று கிணறு, மேல்நிலை தொட்டி, சின்டெக்ஸ், சிமெண்ட் தொட்டி, ஏசி ஃபிரிட்ஜ், மண்பானை, தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் பாத்திரம், டிரம்கள், பயன்படுத்தாத உலோக பாத்திரம், பூந்தொட்டி, டயர்கள் உள்ளிட்ட பயன்பாடற்ற பொருட்களை சேகரிப்பதுடன், அப்பகுதிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபேட் மருந்தினை தண்ணீரில் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 புகைமருந்து தெளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாரந்தோறும், தலா ஒரு மண்டலத்திற்கு சுமார் 2,000 முதல் 2,400 வீடுகள் புகை மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் இலக்காகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் டெங்கு தடுப்பு நடவடிக்கையான 'டெங்கு பிரிவென்சன் லீக்' மற்றும் 'டெங்கு ஆப்ரேசன் ஷுல்ட்' போன்ற நடவடிக்கைகளின் மூலம் டெங்கு காய்ச்சல் கடந்த 38 முதல் 40 வது வாரம் வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 14 ஆக இருந்த டெங்கு பாதிப்பு விகிதம், 41 முதல் 43 வது வாரம் வரையிலான காலகட்டத்தில் 11 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 0.3 புள்ளிகள் வெகுவாக குறைந்துள்ளது. இது தமிழ்நாடு அளவில் மிகக்குறைந்த டெங்கு பாதிப்பு ஆகும்.
இதன் தொடர்ச்சியாக 'அதிரடி சரவெடி' கூட்டுத்தூய்மைப்பணியின் போட்டி மூலம் மாநகராட்சி 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்புப் பகுதிகள், கட்டுமான பகுதி, காலி மனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொசு உற்பத்திக்கான மூலங்களை கண்டறிந்து கலன்களை அதிக அளவில் சேகரித்து அகற்றும் பணியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வீடுகளின் மொட்டை மாடிகள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பூந்தொட்டிகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களில் கொசுப்புழுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, மழைக்காலத்தில் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நீர்வழித் தொற்று நோய்களைத் தடுக்கும் நோக்கத்திலும் மாநகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர் குளோரினேஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீரில் உரிய அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு பணிகள் மூலம் பொது மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த பணியில் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் என 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள், கொசுக்கள் பெருக்கத்தை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு கூட்டுத் தூய்மைப்பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப. அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

