Govt Notification
கோவையில் கனமழையால் நிரம்பிய செல்வசிந்தாமணி குளம்: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் வே. சம்பத்குமார் ஆய்வு
SimpliCity News Team · 20 hours ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த கனமழையால், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் நிரம்பி, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேறியதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மேயர் காரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இன்று (26.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்ததன் காரணமாக, சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருந்த மழைநீரை நீர் உறிஞ்சும் வாகனங்கள், மோட்டார்களைப் பயன்படுத்தி வெளியேற்றும் பணியை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. கனமழையினால் செல்வசிந்தாமணி குளம் நிறைந்து, நீரோட்டம் அதிகமாகி சாலைகளில் வெளியேறியது. இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் வே.சம்பத்குமார் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, மேயர் காரங்கநாயகி ராமச்சந்திரன் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு, மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிக கனமழை பெய்ததால், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தண்ணன் குளம், செல்வம்பதி குளம் ஆகிய குளங்கள் நிறைந்து செல்வசிந்தாமணி குளத்திற்கு அதிகமாக நீர் வந்ததால் செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக அகற்றப்பட்டு வருவதாகவும், மேற்கண்ட பகுதிகளில் மணல் மூட்டைகளும் வைக்கப்பட்டு நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையினால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தேங்கும் மழைநீரை மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டதாகவும், வீதிகளில் தேங்கியுள்ள மழைநீரும் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணியானது துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். நேற்று கோயம்புத்தூர் நகர பகுதிகளில் மட்டுமே சுமார் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாக பெய்த கனமழையினால் 80 மி.மீட்டர் மழை பதிவானதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் இணைப்பு வாய்க்காலில் அதிக அளவு மழைநீர் சென்றது. இது வாய்க்காலின் கொள்ளளவைவிட அதிகமாக இருந்ததால், அப்பகுதியில் உள்ள இரண்டு தெருக்களில் உள்ள வீடுகளில் மழைநீர் சென்றது. இதனை அப்புறப்படுத்தும் பணியானது மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை அமைச்சர் வே.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார். அதிக குதிரை திறன் கொண்ட (HP) 40 மோட்டார்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணிகளுக்காக வாகனங்களை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இணைப்பு வாய்க்காலில் கொள்ளளவை அதிகப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு எளிதாக செல்லும் வகையில் அலைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் அதிக மழை பெய்தாலும், மழைநீர் தேங்காமல் செல்ல நிரந்தர நடவடிக்கையாக அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், பொதுசுகாதாரக்குழுத்தலைவர் பெமாரிசெல்வன், உதவி அணையர்கள் கணேசன் (மத்தியம்), முத்துசாமி (தெற்கு), நர்மதா (மேற்கு), மகேஷ்கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளர் ஜெகன், ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ் (பொ), சரவணக்குமார் (பொ), சவிதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், சபரிராஜ், ஏஞ்சலினா, குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


