Govt Notification
கோவையில் நாளை முதல் 'அதிரடி சரவெடி' டெங்கு தடுப்பு தூய்மைப்பணி போட்டி - மாநகராட்சி தகவல்
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு இடையே 'அதிரடி சரவெடி' என்ற பெயரில் டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப்பணி தொடர் போட்டி நாளை (23.10.2026) முதல் தொடங்க உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி 5 மண்டலங்களில் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால் காய்ச்சல் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெங்கு பிரிவென்சன் லீக் (டி.பி.எல்) போட்டியின் மூலம் 60,65,000-க்கும் மேலாக 5 மண்டலங்களிலும் டெங்கு உற்பத்தி செய்யும் கலன்கள் அகற்றப்பட்டு, கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக டெங்கு உற்பத்தி செய்யும் கலன்களில் நன்னீர் தேங்கியிருக்க வாய்ப்பு இருப்பதால், மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களுக்கு இடையே 'அதிரடி சரவெடி' என்ற தலைப்பின் கீழ் டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப்பணி போட்டி 23.10.2026 முதல் 04.11.2026 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில், 5 மண்டலங்களில் நன்னீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதற்கு காரணமான டயர், டப்பா, தேங்காய் சிரட்டை, உடைந்த ஜாடி, தேங்காய் ஓடுகள், உடைந்த பானைகள், பயன்படுத்தாத பாட்டில்கள், ப்ளு பேரல் டிரம்கள், டீ கப்புகள், பார்சல் புட் கண்டைனர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கலன்களை அதிக அளவில் அகற்றி வெற்றிபெறும் மண்டலம், அதிரடி சரவெடி டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப்பணி போட்டி தொடரின் வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
இந்த போட்டியில் வெற்றிபெரும் மண்டலங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூபாய் 10,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, இரண்டாவது பரிசாக ரூபாய் 5,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, மூன்றாவது பரிசாக ரூபாய் 3,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, நான்காவது பரிசாக ரூபாய் 2,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி மற்றும் ஐந்தாவது பரிசாக ரூபாய் 1,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி என 5 மண்டலங்களுக்கும் பட்டாசு பெட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
போட்டியின் துவக்கமாக நாளை (23.10.2026) வியாழக்கிழமை முதல் 5 மண்டலங்களுக்கும் இடையே டெங்கு காய்ச்சல் பரப்பும் கலன்களை அதிக எண்ணிக்கையில் சேகரித்து அகற்றும் இந்த தூய்மைப்போட்டி தொடர் மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் மூலம் மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கலன்களின் விவரம் இறுதி போட்டி நாளான 04.11.2026 அன்று வெளியிடப்படும். வெற்றியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பரிசுகளை வழங்குவார் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.