Govt Notification
கோவையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க 81900-00200 வாட்ஸ்அப் எண் அறிமுகம்
SimpliCity News Team · 6 hours ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மழைநீர் தேக்கம் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார்களை உடனடியாக தெரிவிக்க கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் 81900-00200 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மண்டல அலுவலர்கள் தலைமையில் களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்படும் மழைநீர் தேக்கம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில் 81900-00200 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 18.10.2026 முதல் 22.10.2026 இன்று மாலை 4.00 மணி வரை பெறப்பட்ட 149 புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழையையொட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை எளிதாக தெரிவிக்கும் வகையில் மண்டல கட்டுப்பாட்டு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மண்டலத்தில் 0422-2577217, வடக்கு மண்டலத்தில் 0422-2243133, மேற்கு மண்டலத்தில் 0422-2553100, தெற்கு மண்டலத்தில் 0422-2252705, மத்திய மண்டலத்தில் 0422-4709525 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.